பொதுமக்களிடம் ஆசை வார்த்தைகளை கூறி பண மோசடியில் ஈடுபட்டவர் கைது
பொதுமக்களிடம் ஆசை வார்த்தைகளை கூறி பண மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
ஆசை வார்த்தைகளை கூறி மோசடி
கரூர் மாநகரில் ஸ்ரீ லட்சுமி ஏஜென்சிஸ் என்ற பெயரில் ½ கிராம் தங்கத்திற்கு பணத்தை செலுத்தினால் 30 நாட்களில் ஒரு கிராம் தங்கம் கிடைக்கும் எனவும், 15 பேருக்கு மேல் இந்த திட்டத்தில் சேர்த்து விட்டால் ஒரு கிராம் தங்க நாணயம் இலவசம் எனவும் ஆசை வார்த்தைகளை பொதுமக்களிடம் விளம்பரம் செய்யப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மாவட்ட தனிப்படையினர் ஸ்ரீ லட்சுமி ஏஜென்சிஸ் என்ற பெயரில் நடத்தி வந்த வடக்கு காந்திகிராமம் முத்து நகரைச் சேர்ந்த கண்ணன் (வயது 43) என்பவரை பிடித்து விசாரணை செய்தனர்.
இதில் அவர் ஏற்கனவே இது போன்று 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் மோசடி திட்டத்தில் ஈடுபட்டு பணம் பெற்றுள்ளதும் அதன் அடிப்படையில் இம்முறையும் பொதுமக்களிடம் ஆசை வார்த்தைகளை கூறி பணம் பெற்று தலைமறைவாக திட்டமிட்டு இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
விழிப்புடன் இருக்க வேண்டும்
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் கூறுகையில், பொதுமக்கள் அதிகவட்டி, பணம் இரட்டிப்பு, செலுத்திய தொகையை காட்டிலும் மிக அதிக மதிப்புள்ள தங்கமோ, நிலமோ தருவதாகவும், பிறரை சேர்த்து விடுவதின் மூலம் அதிகளவில் கமிஷன் தருவதாக கூறி மோசடி திட்டத்தில் பணம் செலுத்தி ஏமாறாமல் விழிப்புடன் இருக்க வேண்டும்.
இதுபோன்று மோசடி திட்டத்தை பற்றிய தகவல்களை உடனுக்குடன் போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும் என அவர் கூறினார்.