குடிபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம்:மருமகனை தாக்கிய விவசாயி கைது
குடிபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம் அடைந்து மருமகனை தாக்கிய விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி
குடிபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம் அடைந்து மருமகனை தாக்கிய விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
காதலித்து திருமணம்
பொள்ளாச்சி அருகே உள்ள பழனிகவுண்டன்புதூரை சேர்ந்தவர் பிரகாஷ்குமார் (வயது 45). விவசாயி. இவர் மெய்மொழி (24) என்பவரை காதலித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரகாஷ்குமார் குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததாக தெரிகிறது.
இதனால் ஏற்பட்ட தகராறில் மனைவி மெய்மொழியை அவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மெய்மொழி தனது தந்தையான வெள்ளாளபாளையத்தை சேர்ந்த விவசாயியான முருகவேல் (50) என்பவரை செல்போனில் தொடர்பு கொண்டு, கணவர் அடிப்பதாக கூறினார்.
மருமகன் மீது தாக்குதல்
இதை தொடர்ந்து முருகவேல், அவரது மனைவி கலைவாணி ஆகியோர் வந்து பிரகாஷ்குமாரை கண்டித்தனர். அப்போது போதையில் இருந்த பிரகாஷ்குமார் மாமனார், மாமியாரை அடித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த முருகவேல் அங்கு கிடந்த கட்டையை எடுத்து, அவரது தலை, கையில் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த பிரகாஷ்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின், மேல்சிகிச்சைக்காக பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் மகாலிங்கபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து முருகவேலை கைது செய்தனர்.