கல்லால் அடித்து கொலை செய்த அண்ணன் கைது
கொடைரோடு அருகே தொழிலாளி சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. அதில் சொத்து பிரச்சினையில் அவரை கல்லால் அடித்து கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர்.;
மர்ம சாவு
கொடைரோடு அருகேயுள்ள மாவுத்தன்பட்டியை சேர்ந்தவர் சுந்தரேசன் (வயது 40). கூலித்தொழிலாளி. இவர், கடந்த 25-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. மறுநாள் கொடைரோடு அருகே உள்ள ஏட்டுநாயக்கர் காலனி பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் சுந்தரசேன் தலையில் காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த அம்மையநாயக்கனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவருடைய உடலை கைப்பற்றி, பிரதே பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அடித்து கொலை
அதில் சுந்தரேசனின் தாய் ராஜாமணி, அவருடைய அண்ணன் முருகன் ஆகியோர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன், போலீஸ் இன்ஸ்பெக்டர் குருவுத்தாய் மற்றும் போலீசார் அவர்களிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர்.
அதில் சுந்தரேசனை கல்லால் அடித்து கொலை செய்ததாக முருகன் போலீசில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
அண்ணன் கைது
அதில், தாய் ராஜாமணி, அண்ணன் முருகன் ஆகியோரிடம் சொத்தில் பங்கு கேட்டு சுந்தரேசன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். சம்பவத்தின்போது ஏற்பட்ட தகராறில் முருகன் தம்பி என்றுகூட பார்க்காமல் கல்லால் சுந்தரேசன் தலையில் அடித்து உள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் வீட்டை விட்டு வெளியே சென்று தனியார் தோட்ட பகுதியில் இறந்து விட்டார் என்று அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து கொலை வழக்காக மாற்றி, போலீசார் பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.
சொத்து பிரச்சினையில் தம்பியை அண்ணனே கொலை செய்த சம்பவம் கொடைரோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.