சேலம் கன்னங்குறிச்சியில் தொழிலாளி கொலை வழக்கில் நண்பர்கள் 3 பேர் கைது
சேலம் கன்னங்குறிச்சியில் தொழிலாளி கொலை வழக்கில் நண்பர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கன்னங்குறிச்சி,
சேலம் கன்னங்குறிச்சியில் தொழிலாளி கொலை வழக்கில் நண்பர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.
தொழிலாளி கொலை
சேலம் பெரிய கொல்லப்பட்டியை சேர்ந்தவர் அருள். இவர் கோரிமேட்டில் இருந்து கன்னங்குறிச்சி செல்லும் பாதையில் மரம் அறுக்கும் மில் நடத்தி வருகிறார். இதில் செட்டிச்சாவடியை சேர்ந்த ரஞ்சித்குமார் (வயது 45) என்பவர் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் தலை மற்றும் கால்களில் வெட்டு காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கன்னங்குறிச்சி போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரிய கொல்லப்பட்டியை சேர்ந்த கோகுநாத் (30), கோபிநாதன் (32), வெங்கடேசன், (35) ஆகிய 3 பேரையும் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.
அதன் விவரம் வருமாறு:-
நண்பர்கள் 3 பேர் கைது
கொலை செய்யப்பட்ட ரஞ்சித்குமார், கோகுநாத், கோபிநாதன், வெங்கடேசன் ஆகிய 4 பேரும் நண்பர்கள். இவர்கள் தினமும் மாலையில் ஒன்றாக மது குடிப்பது வழக்கம். சம்பவத்தன்று 4 பேரும் மது குடித்து கொண்டு இருந்துள்ளனர். அப்போது ரஞ்சித்குமார், கோகுநாத்தின் தாயார் மற்றும் மாமியாரை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார்.
அவர்களை திட்ட வேண்டாம் என நண்பர்கள் கூறியுள்ளனர். இருப்பினும் அவர் தொடர்ந்து திட்டி கொண்டே இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அடைந்த கோகுல்நாத் உள்ளிட்ட 3 பேரும் கொடுவாள் மற்றும் கட்டையால் ரஞ்சித்குமாரை வெட்டியும், அடித்தும் கொலை செய்ததாக கூறினர். இதனை தொடர்ந்து கோகுல்நாத், கோபிநாதன், வெங்கடேசன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.