மதுபாட்டிலால் பெண் குத்திக்கொலை:கணவன் உள்பட 2 பேர் கைது

மதுபாட்டிலால் பெண் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கணவன் உள்பட 2 பேர் கைது கள்ளக்காதலன் கொலை செய்ததாக நாடகமாடியது அம்பலம்

Update: 2023-06-14 19:59 GMT

அயோத்தியாப்பட்டணம்

மதுபாட்டிலால் பெண் குத்திக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக கணவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். கள்ளக்காதலன் கொலை செய்ததாக நாடகமாடியது அம்பலமாகி உள்ளது.

பெண் குத்திக்கொலை

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த காரிப்பட்டி குழந்தைசாமி நாடார்நகர் பகுதியைச் சேர்ந்த ராமர் மனைவி சசிகலா (வயது 31). கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2 வருடங்களாக கணவரை பிரிந்து சசிகலா தனியாக வாழ்ந்து வந்தார். இவருடைய ஒரு மகனும், மகளும் ராமருடன் ராசிபுரத்தில் வசித்து வருகின்றனர்.

இதற்கிடையே காரிப்பட்டி பகுதியில் தனியாக வசித்து வந்த சசிகலா, மகாலட்சுமிநகர் பகுதியில் மதுபாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அயோத்தியாப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கணவன் உள்பட 2 பேர் கைது

அப்போது கொலை செய்யப்பட்ட சசிகலாவுக்கு, அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் தொடர்பு இருந்ததாகவும், அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சசிகலா கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. ஆனால் போலீசார் நடத்திய விசாரணையில், சசிகலாவின் கணவர் ராமர், அவருடைய நண்பர் கிருஷ்ணராஜ் ஆகிய இருவரும் சசிகலாவை மதுபாட்டிலால் குத்தி கொலை செய்தது தெரிய வந்தது. அதாவது, சசிகலாவை அழைத்து சென்று குடும்பம் நடத்த ராமர் வந்ததாகவும், அவருக்கு துணையாக கிருஷ்ணராஜ் வந்ததாகவும் தெரிகிறது.

அப்போது ஏற்பட்ட தகராறில் சசிகலா மதுபாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. மேலும் சசிகலாவை, அவருடைய கள்ளக்காதலன் கொலை செய்ததாக முதலில் ராமர் நாடகமாடியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீசார் சசிகலாவின் கணவர் ராமர், அவருடைய நண்பர் கிருஷ்ணராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்