சிறுமிக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் உள்பட 2 பேர் கைது

தேனி அருகே 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-26 21:00 GMT

தேனி அருகே 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பாலியல் கொடுமை

தேனி அருகே உள்ள வளையப்பட்டி மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 55). கூலித்தொழிலாளி. அதே ஊரில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரி அருகில் வசிப்பவர் பகவதிராஜ் (55). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்தநிலையில் முனியாண்டி, 11 வயது சிறுமியை வடை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்று அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. சுமார் 6 மாத காலமாக சிறுமிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த நிலையில், 10 நாட்களுக்கு முன்பு சிறுமியை பாலியல் ரீதியில் சித்ரவதை செய்ததாக தெரிகிறது.

ஆசிரியர் உள்பட 2 பேர் கைது

அதே சிறுமியை ஆசிரியர் பகவதிராஜூவும் பாலியல் கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவங்கள் குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தேனி அனைத்து மகளிர் போலீசார் சம்பந்தப்பட்ட சிறுமியின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது சிறுமி கொடுத்த வாக்குமூலத்தை புகாராக எடுத்துக்கொண்டு இந்த சம்பவம் குறித்து தேனி அனைத்து மகளிர் போலீசார் நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கில் முனியாண்டி, பகவதிராஜ் ஆகிய 2 பேரையும் போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷா, சப்-இன்ஸ்பெக்டர் மலரம்மாள் ஆகியோர் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். கைதான இருவரையும் தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு நபரும் பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி வாக்குமூலம் அளித்து இருந்தார். ஆனால், அந்த நபர் சில மாதங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி இறந்து விட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் அவர் பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்