மூதாட்டி வீட்டில் திருடிய 2 பேர் கைது
ஓமலூர் அருகே மூதாட்டி வீட்டில் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஓமலூர்
ஓமலூரை அடுத்த மோளிகாடு பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 75). கணவர் இறந்து விட்ட நிலையில் மூதாட்டி தனியாக வசித்து வந்தார். கடந்த மாதம் 17-ந் தேதி நள்ளிரவில் இவருடைய வீட்டுக்குள் இருந்து 2 பேர் வெளியே ஓடினர். இதனால் அதிர்ச்சி அடைந்த லட்சுமி, பீரோவை திறந்து பார்த்தபோது அதில் இருந்த 5½ பவுன் நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து அவர் ஓமலூர் போலீசில் புகார் அளித்தார். போலீசாரின் விசாரணையில் லட்சுமி வீட்டில் திருடியது, வாழப்பாடி ஒட்டர் தெரு புது காலனியை சேர்ந்த முத்து (38), கூட்டாத்துப்பட்டி புது காலனியை சேர்ந்த ஹரிபாபு (45) என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 5½ பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.