வேடசந்தூர் அருகே தொழில் அதிபரை மிரட்டி பணம் பறித்தவர் கைது
வேடசந்தூர் அருகே தொழில் அதிபரை மிரட்டி பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 40). தொழில் அதிபரான இவர், வேடசந்தூர் அருகே கோடாங்கிபட்டியில் கொட்டாங்குச்சியின் மூலம் கார்பன் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவர், வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில், வேடசந்தூர் அருகே உள்ள கோடாங்கிபட்டியை சேர்ந்த ரமேஷ் (41) என்பவர் எனது தொழிற்சாலை மூலம் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி என்னை மிரட்டி ரூ.40 ஆயிரம் பறித்து கொண்டார். மேலும் ரூ.30 ஆயிரம் கேட்டு மிரட்டினார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில், தன்னை பத்திரிகை நிருபர் எனக்கூறி ராஜேந்திரனிடம் ரமேஷ் பணம் பறித்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.