தந்தை கொலை வழக்கில் சிறுமி உள்பட 2 பேர் கைது
சத்திரப்பட்டியில் தந்தை கொலை வழக்கில் சிறுமி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சத்திரப்பட்டி முல்லை நகரை சேர்ந்தவர் ஓமந்தூரான் (வயது 45). இவர் கேரளாவில் கொடுக்கல்-வாங்கல் தொழில் நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ந்தேதி வீட்டில் இருந்த ஓமந்தூரான் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பின்னர் இந்த கொலை வழக்கை போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் ஓமந்தூரான் மனைவி பாண்டீஸ்வரி, உறவினர்கள் உள்பட 5 பேரை கைது செய்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், ஓமந்தூரானின் 17 வயது மகள், தாசரிபட்டியை சேர்ந்த சின்ன மாமானார் பாஸ்கரன் (54) என்பவருக்கும் கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து நேற்று அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தந்தை கொலை வழக்கில் ஒரு ஆண்டுக்கு பின் மகள், உறவினரை கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.