மோட்டார் சைக்கிள் திருடன் கைது
தர்மபுரி நகரில் மோட்டார் சைக்கிள் திருடன் கைது செய்யப்பட்டான்.;
தர்மபுரி நகரில் அரசு ஆஸ்பத்திரி, உழவா் சந்தை, மாவட்ட விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட இடங்களில் அடிக்கடி மோட்டார் சைக்கிள் மற்றும் மொபட்டுகள் திருட்டு போனது. இது தொடர்பாக தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருசக்கர வாகனங்கள் திருட்டு குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக தர்மபுரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயசங்கர், பெருமாள், பாா்த்தீபன், சூர்யமூர்த்தி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து திருடர்களை தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று தர்மபுரி- சேலம் மெயின்ரோடு பாரதிபுரத்தில் தனிப்படை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த ஒருவரை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர், முன்னுக்கு பின்னாக பேசினார்.
இதையடுத்து போலீசார் அவரை தர்மபுரி டவுன் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மொபட்டுகள் திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். மேலும் விசாரணையில் அவர் நல்லம்பள்ளி கெட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த நாகராஜ் (வயது37) என தெரியவந்தது. தொடர்ந்து நாகராஜிடம் இருந்து தர்மபுரி நகரில திருட்டு போன 4 மோட்டார் சைக்கிள்கள், 4 மொபட்டுக்கள் என மொத்தம் 8 இரு சக்கர வாகனங்களை போலீசார் மீட்டனர். இதைத்தொடர்ந்து அவனை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.