தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் திருட முயன்ற 3 பேர் கைது
ஓசூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் திருட முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மத்திகிரி
ஓசூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் திருட முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தனியார் நிறுவன ஊழியர்
தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 38). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். மேலும் இவர் குடும்பத்துடன் ஓசூர் சிவக்குமார் நகர் 9-வது குறுக்கு தெருவில் வசித்து வருகிறார். பொங்கல் பண்டிகையை கொண்டாட நாகராஜ் குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊருக்கு சென்று உள்ளார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை மர்ம நபர்கள் அவரது வீட்டிற்குள் புகுந்து பீரோவை உடைத்து நகை, பணத்தை திருட முயன்றனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் எழுந்து வந்து பார்த்தனர். அப்போது 3 பேர் வீட்டிற்குள் இருப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டி விட்டு, மத்திகிரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
3 பேர் கைது
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாவித்திரி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் வீட்டிற்குள் இருந்த 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் கெலமங்கலம் ஜீவா நகரை சேர்ந்த முருகன் (38), எஸ்.முதுகானப்பள்ளியை சேர்ந்த சந்தோஷ்குமார் (26), யாரப் (26) ஆகியோர் என்பதும், நாகராஜின் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு நகை, பணம் திருட முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் வேறு எங்கும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்களா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.