கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தல்; ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது

கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-01-09 16:35 GMT

கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்தப்படுவதாக கம்பம் வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு), சப்-இன்ஸ்பெக்டர் விஜய் ஆனந்த் தலைமையிலான போலீசார் கம்பம்மெட்டு சாலை 18-ம் கால்வாய் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக 2 பெண்கள் உள்பட 3 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களை போலீசார் மறித்து விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில், 3 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

மேலும் விசாரணையில், அவர்கள் கம்பம் குரங்குமாயன் தெருவை சேர்ந்த பாண்டியராஜன் மனைவி லதா (வயது 40), அவரது மகள் அபர்ணா (23), மகன் ஜெயக்குமார் (19) என்பதும், கேரளாவுக்கு மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திச்சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட ஜெயக்குமார் மற்றும் அவரது தாய் லதா மீது தலா 9 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்