கிரானைட் நிறுவனத்தில் திருடிய 3 பேர் கைது

காவேரிப்பட்டணம் அருகே கிரானைட் நிறுவனத்தில் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-11-20 18:45 GMT

காவேரிப்பட்டணம்:

காவேரிப்பட்டணம் அருகே கிரானைட் நிறுவனத்தில் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிரானைட் நிறுவனத்தில் திருட்டு

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா நெடுங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தன் (வயது 35). இவர் காவேரிப்பட்டணம் அருகே நரிமேடு பகுதியில் கிரானைட் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த ஒரு ஆண்டாக அங்கு பணிகள் நடைபெறவில்லை. இதனால் நிறுவனம் மூடியே இருந்தது.

இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி காலை கந்தன் தனது நிறுவனத்திற்கு சென்றார். அப்போது அங்கு நிறுவன கதவு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் அங்கிருந்த 6 மோட்டார்கள், 5 இரும்பு பெட்டிகள் என மொத்தம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து கந்தன் காவேரிப்பட்டணம் போலீசில் புகார் செய்தார்.

3 பேர் கைது

அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது பர்கூர் தாலுகா அஞ்சூரை சேர்ந்த ஹரீஷ் (22), ஜெகதேவி காந்தி நகர் ஆனந்தன் (21), நக்கல்பட்டி ஆகாஷ் (20) ஆகியோர் கிரானைட் நிறுவனத்தில் பொருட்களை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் கிரானைட் நிறுவனத்தில் திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டன. இவர்கள் வேறு எங்காவது திருட்டில் ஈடுபட்டார்களா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்