போலீஸ் நிலையங்களில் ஆவணங்களை திருடிய தொழிலாளி கைது

போலீஸ் நிலையங்களில் ஆவணங்களை திருடிய வழக்கில் தலைமறைவாக இருந்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

Update: 2022-11-06 17:33 GMT

தாடிக்கொம்பு அருகே உள்ள அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அழகர்சாமி (வயது 58). இவர், கடந்த 2006-ம் ஆண்டு வடமதுரை பகுதியில் ரகளையில் ஈடுபட்டார். அப்போது பணியில் இருந்த போலீசார், அவரை பிடித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் உட்கார வைத்திருந்தனர். போலீசார் உணவருந்தும் நேரத்தில் அழகர்சாமி போலீஸ் நிலையத்திலிருந்த டி.எஸ்.ஆர்.உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

இதேபோல் அவர், திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகுந்து அங்கிருந்த சில ஆவணங்களை திருடி சென்றதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது போலீசார் விழிப்புடன் இருக்கிறார்களா என்று சோதிக்கவும், அவர்களை பழிவாங்குவதற்காகவும் ஆவணங்களை திருடி சென்றதாக தெரிவித்தார். இதற்கிடையே போலீசார் அழகர்சாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். சில நாட்களிலேயே ஜாமினில் வெளியே வந்த அழகர்சாமி, கோர்ட்டில் ஆஜராகாமல் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்த நிலையில் அழகர்சாமியை கைது செய்யும்படி வேடசந்தூர் கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. அதனைத்தொடர்ந்து வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு துர்காதேவி தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அதில் அழகர்சாமி திருப்பூரில் தங்கி சுமைதூக்கும் வேலை பார்ப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து திருப்பூர் சென்ற தனிப்படை போலீசார், அழகர்சாமியை பிடித்து கைது செய்து வேடசந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்