திண்டுக்கல்லில் பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி; மதுரை சகோதரிகள் கைது
திண்டுக்கல்லில் பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற மதுரை சகோதரிகள் கைது செய்யப்பட்டனர்.
மதுரையை சேர்ந்த நந்தினி, அவருடைய தங்கை நிரஞ்சனா ஆகியோர் நேற்று திண்டுக்கல் பஸ் நிலையத்தில் திடீர் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது பிரதமருக்கு எதிரான வாசகம் இடம்பெற்ற பதாகையை ஏந்தியபடி, துண்டு பிரசுரம் வினியோகம் செய்ததாக பா.ஜ.க.வினர் குற்றம்சாட்டினர்.
இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்தில் பா.ஜ.க.வினர் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று 2 பேரையும் அப்புறப்படுத்தினர். ஆனால் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க.வினர் வலியுறுத்தினர். அப்போது நந்தினி, நிரஞ்சனா ஆகியோருக்கு ஆதரவாக சில அரசியல் கட்சியினர் போலீஸ் நிலையத்துக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அரசியல் கட்சியினரை போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் நந்தினி, நிரஞ்சனா ஆகியோர் இன்று திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிட போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வடக்கு போலீசார் விரைந்து சென்று 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். இதற்கிடையே பா.ஜ.க. மாவட்ட துணை தலைவி மல்லிகா, 2 பேர் மீதும் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் நந்தினி, நிரஞ்சனா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிந்து, அவர்களை கைது செய்தனர்.