நாமக்கல்லில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் பெயிண்டர் கைது
நாமக்கல்லில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் பெயிண்டரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
நாமக்கல்லில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் பெயிண்டரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
ரியல் எஸ்டேட் அதிபர் கொலை
நாமக்கல்லில் உள்ள ஜெய் நகரை சேர்ந்தவர் குமரேசன் (வயது 48). ரியல் எஸ்டேட் அதிபர். இவர் கடந்த 18-ந் தேதி இரவு சேந்தமங்கலம் சாலையில் உள்ள மதுக்கடை பாரில் நண்பர்களுடன் மது குடித்து விட்டு நள்ளிரவு வீடு திரும்பி கொண்டு இருந்தார். நாமக்கல்- திருச்சி சாலை பழைய நீதிமன்ற கட்டிடம் அருகே அவர் காரை நிறுத்தி இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த மர்மநபர் குமரேசனின் கழுத்தில் கத்தியால் குத்தி உள்ளார். இதில் குமரேசன் பரிதாபமாக இறந்தார்.
இந்த கொலை சம்பவம் குறித்து அவருடைய மனைவி துர்கா நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த கொலை தொடர்பாக துப்பு துலக்க போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின்பேரில் நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் மேற்பார்வையில் பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு தீபக் ரஜினி, இன்ஸ்பெக்டர்கள் சங்கரபாண்டியன், தெய்வசிகாமணி, செந்தில்குமார், சசிகுமார் ஆகியோர் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப் பட்டு இருந்தது.
பெயிண்டர் கைது
தனிப்படையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் வீசாணம் வீனஸ் காலனியை சேர்ந்த ராமஜெயம் மகன் பெயிண்டரான நவீன் (22) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து தனிப்படை போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.
இதையடுத்து கொலையாளியை துரிதமாக கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி பாராட்டு சான்றிதழ் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கொலை செய்யப்பட்ட குமரேசன், சம்பவ இடத்தில் நின்று கொண்டு இருந்தபோது, அங்கு வந்த நவீனுக்கும், குமரேசனுக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த தகராறு முற்றியதில் நவீன் கத்தியால் குத்தி குமரேசனை கொலை செய்து உள்ளார். அவர்களுக்கு இடையே முன்விரோதம் எதுவும் இல்லை. இந்த வழக்கில் கொலையாளியை அடையாளம் காண கண்காணிப்பு கேமரா பெரிதும் உதவியது.
கண்காணிப்பு கேமரா
எனவே பொதுமக்களும், கடைக்காரர்களும் தெருவை நோக்கி கண்காணிப்பு கேமரா பொருத்தினால் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், குற்றவாளிகளை அடையாளம் காணவும் போலீசாருக்கு உதவியாக இருக்கும். இதேபோல் கொல்லிமலையில் காணாமல் போன 4 மாணவர்களையும் தனிப்படை போலீசார் சுமார் 5 மணி நேரத்தில் மீட்டனர். அவர்கள் படிக்க முடியாமல் வேலைக்காக திருப்பூர் சென்றதாக கூறுகின்றனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.