தர்மபுரி
ஒகேனக்கல் வனப்பகுதியில் மான் வேட்டையாடிய வாலிபரை வனத்துறையினர் கைது செய்தனர்.
மான் வேட்டை
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே உள்ள ஊட்டமலை வனப்பகுதியில் வனத்துறையினர் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் நாட்டுத்துப்பாக்கியுடன் வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அவர் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பூமரத்து குழி கிராமத்தைச் சேர்ந்த சக்தி (வயது 28) என்பது தெரியவந்தது.
மேலும் அவர் வனப்பகுதியில் மானை வேட்டையாடி கறியை மோட்டார் சைக்கிளில் எடுத்து வந்தது தெரிந்தது. இது தொடர்பாக வனத்துறையினர் சக்தியை கைது செய்தனர். அவரிடம் இருந்து மான் கறி மற்றும் தோல், நாட்டுத்துப்பாக்கி ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை பென்னாகரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தர்மபுரி சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பாக தர்மபுரி மாவட்ட வன அலுவலர் அப்பல்ல நாயுடு கூறியதாவது:-
கடும் நடவடிக்கை
கள்ளத்துப்பாக்கி வைத்திருத்தல், வனவிலங்குகளை வேட்டையாடுதல் ஆகியவை தண்டனைக்குரிய குற்றங்கள் ஆகும். எனவே கள்ளத்துப்பாக்கி வைத்திருப்போர் தாமாக முன்வந்து போலீஸ் நிலையங்கள், வனத்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும். கள்ளத்துப்பாக்கி வைத்திருப்பவர்கள் மற்றும் வனவிலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளுக்குள் அத்துமீறி நுழைந்து குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். யாராவது கள்ளத்துப்பாக்கி வைத்திருப்பது தெரிய வந்தாலோ, வனவிலங்குகளை வேட்டையாடுதல் போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறுவதாக பொதுமக்கள் அறிந்தாலோ தர்மபுரி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம். இவர்களின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.