மருத்துவ காப்பீட்டு நிறுவன நிர்வாக இயக்குனருக்கு பிடிவாரண்டு
அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு நிறுவன நிர்வாக இயக்குனருக்கு அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி ராமராஜ் தலைமையிலான அமர்வு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
அறுவை சிகிச்சை
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் பாரதி(வயது 43). இவர் தமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்ட சந்தாதாரர் ஆவார். புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நிர்வகிக்கும் பணியை அரசின் சார்பில் எம்.டி. இந்தியா ஹெல்த் இன்சூரன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் செய்து வருகிறது.
இத்திட்டத்திற்கான காப்பீட்டு சேவையை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்குகிறது. பாரதியின் கணவர் சுவாமிநாதனுக்கு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவ சிகிச்சைக்கான செலவை மருத்துவ காப்பீட்டு நிறுவனம் முழுவதுமாக தர மறுத்துவிட்டதால் அந்நிறுவனத்தின் மீது கடந்த 2020-ம் ஆண்டு அவர் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
பிடிவாரண்டு
கடந்த ஜூலை மாதம் இந்த வழக்கில் தீர்ப்பளித்த அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் புகார்தாரருக்கு மருத்துவ சிகிச்சைக்காக ஏற்பட்ட செலவில் அளிக்க வேண்டிய தொகை ரூ.1,98,308 மற்றும் சேவை குறைபாட்டால் ஏற்பட்ட சிரமங்களுக்கு இழப்பீடாக ரூ.50 ஆயிரத்தை தமிழக அரசின் சார்பில் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நிர்வகிக்கும் தனியார் நிறுவனம் கடந்த ஆகஸ்டு மாதத்துக்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டபடி பணத்தை வழங்காததால் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாரதி கடந்த நவம்பர் மாதம் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அறிவிப்பை பெற்றுக்கொண்டு விசாரணை நாளில் நிறுவனத்தின் சார்பில் ஆணையத்தில் யாரும் ஆஜராகவில்லை. இதனால் எம்.டி. இந்தியா ஹெல்த் இன்சூரன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனருக்கு, அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி ராமராஜ் தலைமையிலான அமர்வு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
3 ஆண்டுகள் வரை சிறை
புகார்களை விசாரிக்கும்போது சிவில் நீதிமன்றம் போல மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்கள் செயல்படுகின்றன. இந்த ஆணையங்கள் வழங்கும் தீர்ப்புகளை சம்பந்தப்பட்ட நபர்கள் நிறைவேற்றத் தவறினால் அவர்கள் மீது குற்றவியல் நீதிமன்றங்களை போல நடவடிக்கை எடுப்பதற்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களுக்கு புதிய சட்டப்படி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வகையில் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.25 ஆயிரம் வரை அபராதம் அல்லது இரண்டும் ஆணையத்தின் உத்தரவுகளை மதிக்காதவர்கள் மீது விதிக்க மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்கள் அதிகாரம் பெற்றுள்ளன. இதே நிறுவனத்தின் மீது மேலும் நான்கு வழக்குகள் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.