துணை போலீஸ் சூப்பிரண்டு இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு

விபத்து வழக்குகளில் சாட்சியம் அளிக்க வராத துணை போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து கடலூர் கோர்ட்டு உத்தரவிட்டது

Update: 2022-08-10 16:49 GMT

கடலூர்

ஆஜராகவில்லை

கடலூர் மாவட்டம் வடலூர் போலீஸ் நிலையத்தில் கடந்த 2016-ம் ஆண்டு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் சரவணன். அப்போது நடந்த ஒரு விபத்து வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்த அவருக்கு, அந்த வழக்கு தொடர்பாக சாட்சியம் அளிக்க கடலூர் தலைமை குற்றவியல் நீதிமன்றம் மூலமாக பலமுறை அழைப்பாணை (சம்மன்) அனுப்பப்பட்டது.

மேலும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூலமாகவும் அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டது. இருப்பினும் அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இந்நிலையில், நேற்று இந்த வழக்கு மீண்டும் நீதிபதி பிரபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போதும் அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை.

பிடிவாரண்டு

இதையடுத்து, இந்த விபத்து வழக்கில் சாட்சியம் அளிக்க ஆஜராகாமல் இருந்து வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணனுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். சரவணன் தற்போது திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் வடலூர் போலீஸ் நிலையத்தில் கடந்த 2017-ம் ஆண்டு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த ஏழுமலையும், ஒரு வழக்கு தொடர்பாக சம்மன் அனுப்பியும் சாட்சியம் அளிக்க இதே கோர்ட்டுக்கு ஆஜராக வரவில்லை. அவருக்கும் பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இவர் தற்போது திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். ஒரே கோர்ட்டில் துணை போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த இரண்டு வழக்கு விசாரணையும் வருகிற 23-ந்தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இவ்வழக்குகளில் அரசு தரப்பில் வக்கீல் சிவகாமி ஆஜரானார்.

Tags:    

மேலும் செய்திகள்