மதுரை தொழில் அதிபர்கள் கைது விவகாரம்:ரூ.75 கோடிக்கு ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு- புலனாய்வு இயக்குனரகம் தகவல்

மதுரை தொழில் அதிபர்கள் கைது விவகாரத்தில் ரூ.75 கோடிக்கு ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என புலனாய்வு இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.

Update: 2023-06-08 20:15 GMT


மதுரை தொழில் அதிபர்கள் கைது விவகாரத்தில் ரூ.75 கோடிக்கு ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என புலனாய்வு இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.

தொழில் அதிபர்கள் கைது

மதுரை கீழமாசிவீதியில் மொத்தவியாபாரம் செய்து வரும் தொழில் அதிபர்கள் குணாளன், கதிரவன் மற்றும் அருண் சக்கரவர்த்தி ஆகியோர் ஜி.எஸ்.டி.வரி ஏய்ப்பு தொடர்பாக நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். இது குறித்து கோவையில் உள்ள ஜி.எஸ்.டி. புலனாய்வுப்பிரிவு இயக்குனரகத்தின் இணை இயக்குனர் ஹரீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் சட்ட அமலாக்க துறையான ஜி.எஸ்.டி. புலனாய்வுபிரிவு இயக்குனரகத்தின் மதுரை மண்டல அதிகாரிகள் கடந்த மாதம் 11-ந் தேதி குறிப்பிட்ட சில வணிகர்கள் மற்றும் சில்லறை வியாபாரிகளின் வீடுகள், கடைகள், வணிக வளாகங்களில் பில் இல்லாமல் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின்படி சோதனை செய்தனர். அப்போது, 3 தொழில் அதிபர்கள் நடத்தி வந்த நிறுவனங்களில் ஜி.எஸ்.டி. சாப்ட்வேர் பதிவுகளை அவ்வப்போது நீக்குவது, வங்கிகளில் டெபாசிட் செய்த தொகை குறித்த விவரங்களை மட்டும் பராமரிப்பது ஆகிய முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. விற்பனை செய்யப்படும் பொருள்களுக்கு எஸ்டிமேட் எனப்படும் கையால் எழுதி கொடுக்கும் பில்களை பணியாளர்களின் பெயரில் முறைகேடாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

ரூ.75 கோடி வரி ஏய்ப்பு

வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யும் அனைத்து விவரங்களும் வரி ஏய்ப்பு செய்ய வேண்டும் என்ற நோக்கத்துக்காக ஜி.எஸ்.டி. சாப்ட்வேரில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இந்த மோசடிகள் தடயவியல் நிபுணர்கள் மற்றும் மென்பொருள் வல்லுனர்களை கொண்டு கண்டறியப்பட்டுள்ளது. பில் இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு முதற்கட்ட விசாரணையில் ரூ.440 கோடி என தெரியவந்துள்ளது. இதன் மூலம் சுமார் ரூ.75 கோடி வரி ஏய்ப்பு கணக்கிடப்பட்டுள்ளது. இந்த மோசடி குறித்த குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்ட வணிகர்களிடம் தெரிவித்த போது, குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இதனால் அரசுக்கு வரி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதையும் ஒப்புக்கொண்டனர். அதனை தொடரந்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இது குறித்த விசாரணை மற்றும் அரசுக்கு வர வேண்டிய வரி வருமானம் ஆகியன கணக்கிடப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்