மீனவர்கள் கைது விவகாரம்; நிரந்தரத் தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ராமதாஸ்

மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் கடிதம் எழுதுவதால் எந்தப் பயனும் ஏற்படாது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2024-02-08 14:17 GMT

சென்னை,

ஐகோர்ட்டின் கண்டனத்திற்குப் பிறகாவது தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 19 பேரை அவர்களின் இரு விசைப்படகுகளுடன் சிங்களப் படை கைது செய்திருக்கிறது. கைது செய்யப்பட்டவர்களில் இருவர் ஒடிசாவில் இருந்து வந்து மீன்பிடி தொழிலாளர்களாக பணி செய்து வந்தவர்கள் என்று கூறப்படுகிறது. தமிழக மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில், அத்துமீறி நுழைந்து தமிழக மீனவர்களை இலங்கைப் படை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் கைது செய்யப்பட்டனர். அவர்களை மீட்க இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், மேலும் 19 மீனவர்களை இலங்கைப் படை கைது செய்திருப்பதை இயல்பான ஒன்றாக கருத முடியாது. தமிழக மீனவர்களுக்கு எதிரான திட்டமிட்ட நடவடிக்கையாகவே இதை பார்க்க வேண்டும்.

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன்தான் அவர்களை இலங்கை கடற்படை கைது செய்து வருகிறது என்பதை பல நூறு முறை சுட்டிக்காட்டியிருக்கிறேன். இதை உணர்ந்து இந்த சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக மத்திய அரசுக்கு தமிழக முதல்-அமைச்சர் கடிதங்களை மட்டும் எழுதிக் கொண்டிருப்பது போதாது. அதனால், எந்தப் பயனும் ஏற்படாது.

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் கைது நடவடிக்கைகள் குறித்த வழக்கை சில நாட்களுக்கு முன் விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, மீனவர்கள் சிக்கலுக்கு தீர்வு காண ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்காதது ஏன் என்று வினா எழுப்பியிருந்தது. ஐகோர்ட்டின் கண்டனத்திற்குப் பிறகாவது மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வங்கக் கடலில் பாரம்பரியமாக தமிழக மீனவர்கள் மீன்பிடித்து வரும் பகுதிகளில் தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பது சட்டபூர்வ உரிமையாக்கப்பட வேண்டும். இது தொடர்பாக இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சு நடத்த வேண்டும். இப்போது கைது செய்யப்பட்ட 19 மீனவர்கள் உட்பட இலங்கை சிறைகளில் வாடும் அனைத்து மீனவர்களையும், இலங்கை அரசிடம் உள்ள அனைத்து படகுகளையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்."

இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்