மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 413 பேர் கைது
பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 413 பேரை போலீசார் கைது செய்தனர்.
தளி
பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 413 பேரை போலீசார் கைது செய்தனர்.
சாலை மறியல்
விலைவாசி உயர்வை குறைத்திடவும், பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை பாதியாக குறைக்கவும், அரசு துறைகளை தனியாருக்கு விற்க கூடாது என்றும், உணவுப் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரியை திரும்பப் பெறுமாறும், சிறு குறு தொழில்களை பாதுகாத்திடுமாறும், 100 நாள் வேலை திட்டத்திற்கு முழுமையாக நிதி ஒதுக்குமாறும், விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான விலையை தீர்மானித்திடவும், பொதுவினியோக திட்டத்தை பலப்படுத்தவும் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில்
உடுமலை கச்சேரி வீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஊர்வலமாக சென்று தலைமை தபால் அலுவலகத்தை முற்றுவிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து போலீசார் 181 பெண்கள் உட்பட 283 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் உடுமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
ஆர்ப்பாட்டம்
இதேபோன்று தளி பகுதிக்கு உட்பட்ட பள்ளபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 52 பெண்கள் உட்பட 130 பேர் கலந்து கொண்டனர். இதையடுத்து அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து ஜல்லி பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.பின்னர் மாலையில் விடுவித்தனர். உடுமலை மற்றும் தளி பகுதியில் நடைபெற்ற போராட்டத்தால் பரபரப்பு நிலவியது.