தேன்கனிக்கோட்டை:
தளி சாரண்டப்பள்ளி அருகே உள்ள காலேனட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகர் (வயது 32). பெங்களூருவில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரும், பெங்களூருவில் எல்.எல்.பி. படித்து வரும் காலேனட்டியை சேர்ந்த சந்தோஷ் (30) என்பவரும் ஒன்றாக தொழில் தொடங்க முடிவு செய்தனர்.
இதற்காக வங்கியில் கணக்கு தொடங்க சந்தோசிற்கு 10 ஆயிரம் ரூபாயை பிரபாகர் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் நினைத்தது போல் இருவரும் சேர்ந்து தொழில் தொடங்கவில்லை. இதனால் பணத்தை திரும்ப தருமாறு பிரபாகர் கேட்டுள்ளார். ஆனால் சந்தோஷ் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பிரபாகர் பணத்தை திருப்பி கேட்ட நிலையில் சந்தோஷ் கொடுக்க மறுத்ததால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் இருவரும் ஒருவரை ஒருவர் அரிவாளால் தாக்கி கொண்டனர். இதுதொடர்பாக பிரபாகர் மற்றும் சந்தோஷ் தனித்தனியாக தளி போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகர் மற்றும் சந்தோசை கைது செய்தனர்.