தர்மபுரி அருகே தி.மு.க. கவுன்சிலர் மகள் கொலையில் 17 வயது சிறுவன் அதிரடி கைது காதலை கைவிட்டதால் கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம்

தி.மு.க. கவுன்சிலர் மகள் கொலையில் அதிரடி திருப்பமாக 17 வயது சிறுவன் அதிரடி கைது காதலை கைவிட்டதால் கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம்.

Update: 2023-06-08 19:00 GMT

தர்மபுரி அருகே தி.மு.க. கவுன்சிலரின் மகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 17 வயது சிறுவனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். காதலை கைவிட்டதால் கொலை செய்ததாக சிறுவன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான்.

கவுன்சிலர் மகள் கொலை

தர்மபுரி கோல்டன் தெருவை சேர்ந்தவர் புவனேஸ்வரன். இவர் தர்மபுரி நகராட்சி 8-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக உள்ளார். இவருடைய மகள் ஹர்ஷா (வயது 23). ஓசூரில் உள்ள தனியார் மருந்து நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அங்குள்ள தனியார் விடுதியில் தங்கி பணிக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் அதியமான்கோட்டை நரசிங்கபுரம் கோம்பை வனப்பகுதியில் உள்ள பாறை இடுக்கில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் ஹர்ஷா கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக அதியமான்கோட்டை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

சிறுவன் சிக்கினான்

மேலும் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் மேற்பார்வையில் ஹர்ஷா பயன்படுத்திய செல்போனில் உள்ள சிக்னல்கள் ஆய்வு செய்யப்பட்டன. அவர் யாருடன் கடைசியாக பேசினார் என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டது.

இதில் தர்மபுரியை சேர்ந்த 17 வயது சிறுவனுடன் ஹர்ஷா பேசியது தெரியவந்தது. இதையடுத்து அந்த சிறுவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது காதல் விவகாரத்தில் அந்த சிறுவன் ஹர்ஷாவை கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது.

பேசுவது குறைந்தது

இதுதொடர்பாக சிறுவனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சிறுவன் அளித்த வாக்குமூலத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் ஹர்ஷாவின் தம்பி கல்லூரியில் படித்து வருகிறார். இவரும், 17 வயது சிறுவனும் நண்பர்கள் ஆவர்.

பிளஸ்-2 படிப்பை முடித்துள்ள சிறுவனுக்கும், ஹர்ஷாவுக்கும் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நண்பர்கள் போல் பழக தொடங்கியுள்ளனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஹர்சாவுக்கு ஓசூரில் வேலை கிடைத்தது.

இதனால் ஓசூரில் தங்கி வேலை பார்த்த அவர் தர்மபுரிக்கு வருவது குறைந்தது. இதற்கிடையே ஹர்ஷாவுக்கு திருமணம் செய்வதற்காக அவருடைய குடும்பத்தினர் மாப்பிள்ளை பார்க்க தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் ஹர்ஷா சிறுவனுடன் பேசுவது படிப்படியாக குறைய தொடங்கியது.

கடும் வாக்குவாதம்

இந்த நிலையில் நேரில் சந்திக்க வேண்டும் என்று ஹர்ஷாவிடம் அந்த சிறுவன் செல்போனில் பேசியுள்ளான். இதனால் ஹர்ஷா ஓசூரில் இருந்து செவ்வாய்க்கிழமை தர்மபுரிக்கு வந்துள்ளார். அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் சிறுவனுடன் நரசிங்கபுரம் கோம்பை பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு வனத்தையொட்டி உள்ள பகுதியில் நீண்ட நேரம் 2 பேரும் பேசியுள்ளனர்.

அப்போது ஹர்ஷா அந்த சிறுவனிடம் நீ என்னை விட 6 வயது சிறியவன். நாம் திருமணம் செய்து கொண்டால் பிரச்சினைகள் ஏற்படும். எனவே என்னை மறந்து விடு என்று கூறியுள்ளார். ஆனால் இதனை ஏற்று கொள்ளாத சிறுவன் காதலை தொடர வேண்டும் என்று ஹர்ஷாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளான். அப்போது அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

சிறுவன் கைது

இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் திடீரென ஹர்ஷாவின் துப்பட்டாவை பிடுங்கி அதை அவருடைய கழுத்தில் சுற்றி இறுக்கினான். இதில் மூச்சு திணறிய ஹர்ஷா சிறிது நேரத்தில் இறந்துவிட்டார். பிறகு அந்த பகுதியில் உள்ள பாறை இடுக்கில் ஹர்ஷாவின் உடலை போட்டுவிட்டு சிறுவன் அங்கிருந்து தப்பி சென்றது வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து கொலை வழக்குப்பதிவு செய்த அதியமான் கோட்டை போலீசார் சிறுவனை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் சிறுவனை தர்மபுரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

எஸ்.சி. எஸ்.டி. சட்ட பிரிவு

சிறுவனும், கொலை செய்யப்பட்ட ஹர்ஷாவும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இந்த நிலையில் எஸ்.சி. எஸ்.டி. சட்ட பிரிவுகளின் கீழ் இந்த கொலை வழக்கு மாற்றம் செய்யப்பட்டது.

சிறுவன் மற்றும் ஹர்ஷாவின் செல்போன்களில் நடந்த உரையாடல்கள், சிக்னல், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் உள்ள பதிவுகளின் அடிப்படையில் இந்த வழக்கு தொடர்பாக தர்மபுரி போலீஸ் துணை சூப்பிரண்டு செந்தில்குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஹர்ஷாவின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையிலும் விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்