மாரண்டஅள்ளி:
மாரண்டஅள்ளி அருகே உள்ள சென்னப்பன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் குப்பம்மாள் (வயது 60). இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று மாலை குப்பம்மாள் ஆடுகளை மேய்த்து விட்டு, தனது வீட்டின் அருகே கட்டினார். அப்போது அதே பகுதியை சேர்ந்த முனியப்பன் (24), ஆடுகளை கட்டுவது தொடர்பாக குப்பம்மாளுடன் தகராறில் ஈடுபட்டார். மேலும் அவரை தகாத வார்த்தையால் திட்டி, அருகே கிடந்த விறகு கட்டையால் தாக்கியதாக தெரிகிறது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாலிபர் முனியப்பனை கைது செய்தனர்.