மோகனூர் அருகே அண்ணன், தம்பியை தாக்கிய 4 பேர் கைது

Update: 2023-04-26 18:45 GMT

மோகனூர்:

நாமக்கல் மாவட்டம் என்.புதுப்பட்டி கணபதி நகரை சேர்ந்தவர் குமார். இவருடைய மகன் தினேஷ்குமார் (வயது 24). கட்டிட மேஸ்திரி. இவர் சம்பவத்தன்று, என்.புதுப்பட்டியில் இருந்து லத்துவாடி செல்லும் சாலையில் அவருடைய அண்ணன் சதீஷ் என்பவருடன், மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது குரும்பர் தெரு வேகத்தடை அருகே எதிரே வந்தவர்கள், அண்ணன்-தம்பியை பார்த்து தரக்குறைவாகவும், தகாத வார்த்தைகளாலும் திட்டியதாக கூறப்படுகிறது. இதனை தினேஷ்குமார், சதீஷ் தட்டி கேட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், தினேஷ்குமார், சதீசை தாக்கினர். இதனை பார்த்து அங்கிருந்தவர்கள் ஓடி வந்தனர். அப்போது தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். பின்னர் அண்ணன், தம்பி ஆகியோர் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து அவர்கள் மோகனூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை தாக்கிய வளையப்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்த சரவணன் (29), குமார் மகன் விஜய் (20), லோகநாதன் மகன் சதீஷ்குமார் (29), கருப்பையா மகன் சத்தியசீலன் (28) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்