தொழிலாளிக்கு கத்திக்குத்து; தம்பி கைது
தொழிலாளியை கத்தியால் குத்திய தம்பி கைது செய்யப்பட்டார்.
அன்னதானப்பட்டி:
சேலம் சீலநாயக்கன்பட்டி பெருமாள் கோவில் மேடு 7-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் மதியழகன் (வயது 28). இவருடைய தம்பி சுபாஷ் சந்திரபோஸ் (22). இருவரும் கூலித்தொழிலாளர்கள். நேற்று காலை அண்ணன்-தம்பி இருவரும் தாதகாப்பட்டி பில்லுக்கடை பஸ் நிறுத்தம் திருச்சி மெயின் ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது இருவருக்கும் இடையே ஒரு பிரச்சினை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றியது. இதில் ஆத்திரமடைந்த சந்திரபோஸ் தான் வைத்திருந்த கத்தியால் மதியழகனை திடீரென சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அன்னதானப்பட்டி போலீசார், சந்திரபோஸை கைது செய்தனர்.