வெவ்வேறு சம்பவம்: போலீஸ் அதிகாரிகளை வாளை காட்டி மிரட்டிய 3 பேர் கைது

சிவகங்கை பகுதியில் போலீஸ் அதிகாரிகளை வாளால் மிரட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-12 18:45 GMT

சிவகங்கை, 

சிவகங்கை பகுதியில் போலீஸ் அதிகாரிகளை வாளால் மிரட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல்

சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் சிவகங்கை பஸ் நிலையப் பகுதியில் ரோந்து சென்றார். அப்போது சிவகங்கை ராஜேந்திர பிரசாத் தெருவை சேர்ந்த தேவேந்திரன் (வயது 40) என்பவர் கையில் வாளுடன் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமாரை அவதூறாக பேசி அவரை பணியை செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து சிவகங்கை நகர் போலீசார் தேவேந்திரனை கைது செய்து அவரிடமிருந்து வாள், மோட்டார் சைக்கிள் மற்றும் 11 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மற்றொரு சம்பவம்

இதேபோல் சிவகங்கை தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் பிரபா சிவகங்கையை அடுத்த நாட்டரசன்கோட்டை பகுதியில் ரோந்து சென்றார். அப்போது தண்ணீர் பந்தல் பகுதியில் 2 வாலிபர்கள் வாளுடன் அந்தப் பகுதியில் சென்றவர்களை மிரட்டிக் கொண்டிருந்தனர். இதை பார்த்து அங்கே சென்ற சப்-இன்ஸ்பெக்டர் பிரபாவையும் அவர்கள் வாளால் வெட்ட வந்தனர். தொடர்ந்து சிவகங்கை தாலுகா போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் காரைக்குடி தெற்கு பகுதி சேர்ந்த அஜித்குமார் (27), காரைக்குடி அண்ணாநகரை சேர்ந்த திருக்குமார் (19) என்று தெரிந்தது. மேலும் அஜித்குமார் மீது 14 வழக்குகளும் திருக்குமார் மீது 2 வழக்குகளும் ஏற்கனவே இருப்பதாக தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்