ஏரியூர்:
ஏரியூர் அருகே நிலத்தகராறில் விவசாயியை அரிவாளால் வெட்டியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நிலத்தகராறு
தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள மூங்கில்மடுவு கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 45). விவசாயி. இவருக்கும், வெற்றிலை தோட்டத்தில் வசித்து வரும் தனது அக்காள் மகன் சூரிய பிரகாஷ் (30) என்பவருக்கும் நீண்ட நாட்களாக நிலத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் பிரச்சினைக்குரிய நிலத்தில் விவசாயம் செய்ய சூரிய பிரகாஷ் சென்றதாக தெரிகிறது. அப்போது அங்கு சென்ற பெருமாள் விவசாயம் செய்வதை தடுத்ததாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையே நேற்று மதியம் சூரிய பிரகாஷ் தனது ஆதரவாளர்களுடன் மூங்கில்முடுவு பஸ் நிறுத்தத்தில் உள்ள டீக்கடைக்கு சென்றார். பின்னர் தான் கொண்டு வந்த அரிவாளால் டீக்கடையில் அமர்ந்திருந்த தனது தாய்மாமன் பெருமாளை சரமாரியாக வெட்டினார். இதில் பெருமாளுக்கு கழுத்து, தலை, நெற்றி உள்ளிட்ட இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்து படுகாயம் அடைந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் சத்தம் போட்டதால் சூரிய பிரகாஷ் மற்றும் ஆதரவாளர்கள் கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட காரில் அங்கிருந்து தப்பி சென்றனர்.
2 பேர் கைது
இதனை தொடர்ந்து உயிருக்கு போராடிய பெருமாளை அங்கிருந்தவர்கள் மீட்டு பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர்் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஏரியூர் போலீசார் கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்களின் வாகன பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். இதையடுத்து கர்நாடகாவுக்கு தப்பி செல்ல முயன்ற ஆகாஷ், வெற்றிவேல் ஆகியோரை பாலக்கோடு பகுதியில் போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேர் தப்பி ஓடி விட்டனர். இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நிலத்தகராறில் தாய்மாமனை அரிவாளால் வெட்டிய சம்பவம் ஏரியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.