பிடிவாரண்டு குற்றவாளிகள் 13 பேர் கைது
ராமநாதபுரம் மாவட்டத்தில் போலீசார் விடிய விடிய நடத்திய அதிரடி ரோந்து பணியில் பிடிவாரண்டு குற்றவாளிகள் 13 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவரின் வீட்டில் இருந்த மான்கொம்பு பறிமுதல் செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் போலீசார் விடிய விடிய நடத்திய அதிரடி ரோந்து பணியில் பிடிவாரண்டு குற்றவாளிகள் 13 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவரின் வீட்டில் இருந்த மான்கொம்பு பறிமுதல் செய்யப்பட்டது.
அதிரடி ரோந்து பணி
ராமநாதபுரம் மாவட்டத்தில் தென்மண்டல ஐ.ஜி. உத்தரவின்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தலைமையில் அனைத்து பகுதிகளிலும் தீவிர சிறப்பு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் முதல் சப்-இன்ஸ்பெக்டர்கள் வரை இந்த ரோந்து பணியில் விடிய விடிய ஈடுபட்டனர். அப்போது பிரச்சினையில் ஈடுபடக்கூடிய நபர்கள், ரவுடிகள், சந்தேக நபர்கள், வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படாமல் தலைமறைவாக இருந்த குற்றவாளிகள், தங்கும் விடுதிகள் தணிக்கை செய்தல் போன்றவை மேற்கொள்ளப்பட்டன.
இந்த சிறப்பு ரோந்தின்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் போலீசார் சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் சரித்திர பதிவேடுகளில் உள்ள 297 பேர் தற்போதைய இருப்பிடம் உள்ளிட்ட விவரங்கள் தணிக்கை செய்யப்பட்டன. குறிப்பாக சரித்திர பதிவேடு உள்ள 234 பேரின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதில் 3 பேரின் வீடுகளில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் குற்ற செயல்களில் ஈடுபடும் எண்ணத்தில் ஆயுதங்களை வைத்திருந்தனரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும், ராமநாதபுரம் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சந்தேகத்திற்கிடமாக சுற்றிய 148 பேர் விசாரிக்கப்பட்டு அவர்களின் கைரேகை சேகரிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, கோர்ட்டில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ள 13 பேர் கைது செய்யப்பட்டனர். குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இதுவரை கைது செய்யப்படாமல் இருந்த 10 பேர் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டனர்.
மான்கொம்பு
114 தங்கும் விடுதிகளில் இருந்தவர்களின் விவரங்கள் சேரிக்கப்பட்டு தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது சந்தேகத்திற்கு இடமாக தங்கியிருந்தவர்களின் கைரேகைகள் சேகரிக்கப்பட்டு விபரங்கள் பதிவு செய்யப்பட்டது. திருவாடானை சமத்துவபுரம் பகுதியில் பாலமுருகன் வீட்டில் நடத்திய சோதனையில் மான்கொம்பு இருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. பாலமுருகனை போலீசார் தேடிவருகின்றனர்.