தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள நாயக்கன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 60). இவர் தனது வீட்டில் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்ப்பதாக மருத்துவத் துறையினருக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து மருத்துவத்துறை அதிகாரிகள் குழுவினர் நேற்று கண்ணனின் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அவர் அலோபதி மருந்து, மாத்திரைகளை பயன்படுத்தி சிகிச்சை அளிப்பது தெரியவந்தது. 10-ம் வகுப்பு படித்த அவர் போலி டாக்டராக செயல்பட்டது விசாரணையில் உறுதியானது. அவர் சிகிச்சை அளிக்க பயன்படுத்திய மருந்து, மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக நலப்பணிகள் இணை இயக்குனர் அலுவலக நியமன அலுவலர் டாக்டர் பாலாஜி கிருஷ்ணாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.