கடைகளை உடைத்து திருடிய 3 பேர் கைது
கடைகளை உடைத்து திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;
பரமக்குடி,
பரமக்குடி அருகே மஞ்சூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவசங்கர். மளிகை கடை வைத்துள்ளர். சம்பவத்தன்று இரவு அவரது கடையை உடைத்து ரூ.15 ஆயிரம் மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். அதே போல் மானாமதுரை வன்னி குடியை சேர்ந்தவர் வினோத். இவர் பார்த்திபனூர் பரளையில் அக்ரோசர்வீஸ் கடை வைத்துள்ளார். இவரது கடையையும் அன்றிரவு உடைத்து ரூ.35 ஆயிரம் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை திருடி சென்றனர். பரமக்குடி ஐ.டி.ஐ. பகுதியை சேர்ந்தவர் அப்துல் அஜீஸ். இவர் வீட்டுக்கு கீழ்பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இவருடைய கடையையும் உடைத்து ரூ.9 ஆயிரத்து 500 திருடப்பட்டது.
இந்த திருட்டு சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் வீட்டு சாமான்களை ஏற்றி வந்த லாரியை தெளிச்சாத்தநல்லூர் அருகே தாலுகா போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில் லாரியில் வந்த 3 பேரும் திண்டுக்கல் மாவட்டம் வேலம்பட்டியை சேர்ந்த கவிமணி (வயது 31), பள்ளப்பட்டியை சேர்ந்த மகா பிரபு (25), நிலக்கோட்டையை சேர்ந்த அருண் பாண்டியன் (31) என்பதும், மேற்கண்ட கடைகளில் திருடியதும் தெரியவந்தது. பின்னர் அவர்களளை போலீசார் கைது செய்தனர்.