கோழி இறைச்சி வியாபாரிக்கு கொலை மிரட்டல்-3 பேர் கைது
கோழி இறைச்சி வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சூரமங்கலம்:
சேலம் திருவாக்கவுண்டனூரில் கோழி இறைச்சி கடை நடத்தி வருபவர் கோவிந்தராஜ் (வயது 34). இவர் நேற்று முன்தினம் கடையில் இறைச்சி விற்று கொண்டிருந்தார். அப்போது திருவாக்கவுண்டனூர் மேத்தா நகரை சேர்ந்த ஆனந்த் (33), சிவபாலன் (26), தேவராஜ் (25) ஆகியோர் கோழியுடன் அங்கு வந்தனர். அவர்கள் தாங்கள் கொண்டு வந்த கோழியை வெட்டி, சுத்தம் செய்து கொடுக்கும்படி கோவிந்தராஜிடம் கூறினர். அதற்கு அவர் மறுத்ததால், தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஆனந்த் உள்ளிட்ட 3 பேரும் கோவிந்தராஜை திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து கோவிந்தராஜ் சூரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்த், சிவபாலன், தேவராஜ் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.