காரிமங்கலம் அருகே மொபட் மீது லாரி மோதியது; 3 பேர் பலிக்கு காரணமான லாரி டிரைவர் கைது
காரிமங்கலம்:
காரிமங்கலம் அருகே மொபட் மீது லாரி மோதியதில் அண்ணன், 2 தங்கைகள் பலியான விபத்துக்கு காரணமான டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
அண்ணன்- 2 தங்கைகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை சேர்ந்தவர் சிவசங்கர். இவருக்கு மணிகண்டன் (வயது 35) என்ற மகனும், லாவண்யா (25), இந்துமதி (20) ஆகிய மகள்களும் இருந்தனர். பட்டதாரியான லாவண்யா தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்துமதி கல்லூரியில் படித்து வந்தார்.
இதனிடையே லாவண்யாவுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு நடந்தது. இதனால் அவர் பல் சிகிச்சைக்காக தனது அண்ணன் மணிகண்டன், தங்கை இந்துமதியுடன் தர்மபுரிக்கு மொபட்டில் சென்றார். மொபட்டை மணிகண்டன் ஓட்டினார். காரிமங்கலம் அருகே பெரியாம்பட்டி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் மொபட் சென்றது.
லாரி டிரைவர் கைது
அப்போது முன்னால் பஞ்சி லோடு ஏற்றி சென்ற லாரியை மணிகண்டன் முந்த முயன்றார். அந்த சமயம் மராட்டியத்தில் இருந்து வெங்காய லோடு ஏற்றி சென்ற லாரி மொபட் மீது மோதியது. இதில் 2 லாரிகளுக்கு இடையில் சிக்கி அண்ணன், 2 தங்கைகள் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி பலியாகினர். விபத்துக்கு காரணமான வெங்காய லோடு லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இந்த பயங்கர விபத்து குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தப்பி ஓடிய லாரி டிரைவர் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது விபத்தை ஏற்படுத்தியது சேலம் மாவட்டம் காடையாம்பட்டி கே.என்.புதூரை சேர்ந்த டிரைவர் சேகர் (47) என்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று காலை போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.