பாப்பாரப்பட்டி அருகே கட்டிட மேஸ்திரியை கல்லால் தாக்கியவர் கைது

Update: 2023-01-17 18:45 GMT

பாப்பாரப்பட்டி:

பாப்பாரப்பட்டி அருகே பிக்கிலி ஊராட்சி பூதிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 30). கட்டிட மேஸ்திரி. அதே பகுதியை சேர்ந்தவர் முனியப்பன் (37). லாரி டிரைவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு முனியப்பன் தனது நிலத்தில் இருந்த முருங்கை மரத்தை வெட்டி, அதன் கிளைகளை அருகே உள்ள சிவகுமார் நிலத்தில் போட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்தநிலையில் சம்பவத்தன்று சிவகுமார் தனது நிலத்தை உழுவதற்காக முனியப்பன் நிலத்தின் வழியாக டிராக்டரை ஓட்டி சென்றார். அப்போது டிராக்டரை முனியப்பன் வழிமறித்ததால் அவர்கள் 2 பேருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த முனியப்பன் அங்கிருந்த கல்லை எடுத்து சிவகுமாரின் பின் தலையில் தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த சிவகுமார், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு உயிரிக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் பாப்பாரப்பட்டி போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து, முனியப்பனை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்