பாலக்கோட்டில் பஸ்சை எரிக்க சதி திட்டம் தீட்டிய 2 வாலிபர்கள் கைது

பாலக்கோட்டில் பஸ்சை எரிக்க சதி திட்டம் தீட்டிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-01-14 18:45 GMT

பாலக்கோடு:

பஸ்சை எரிக்க...

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பஸ் நிலையம் பின்புறம் உள்ள மறைவான இடத்தில் நின்று கொண்டிருந்த 2 வாலிபர்கள் பஸ்சை எரித்தால் தான் நாம் யார்? என்று போலீசுக்கு தெரியும் என்று பேசிக் கொண்டிருந்தனர். மேலும் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்க வேண்டும் என திட்டம் தீட்டி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதை அருகில் இருந்து கேட்டு கொண்டிருந்த போலீஸ்காரர்கள் அதிர்ச்சி அடைந்து பாலக்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணிக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர் அந்த 2 பேரையும் பிடித்து விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வர உத்தரவிட்டார்.

2 பேர் கைது

இதையடுத்து அந்த 2 வாலிபர்களும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு விசாரிக்கப்பட்டனர். இதில் அவர்கள், பாலக்கோடு அண்ணா நகரை சேர்ந்த ராஜாராம் (வயது 25), ஞானப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த குமார் (22) என்பது தெரியவந்தது.

ஏற்கனவே இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதாகவும், போலீசாரை பழிவாங்கவே பஸ்சை எரிக்க திட்டம் தீட்டியதாகவும் விசாரணையில் தெரிவித்தனர். இதையடுத்து பஸ்சை எரிக்க சதி திட்டம் தீட்டியதாக அந்த 2 வாலிபர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்