அன்னதானப்பட்டியில் தொழிலாளியிடம் வழிப்பறி; 2 பேர் கைது
அன்னதானப்பட்டியில் தொழிலாளியிடம் வழிப்பறி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அன்னதானப்பட்டி:
சேலம் லைன்மேடு தர்மலிங்கம் தெருவை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 27), கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் அன்னதானப்பட்டி மூலப்பிள்ளையார் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சில நபர்கள் பால்ராஜை திடீரென வழி மறித்து, கத்தியை காட்டி மிரட்டினர். பின்னர் அவரை தாக்கி அவரிடம் இருந்து ரூ.2 ஆயிரம் ரொக்கம், செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி சப்- இன்ஸ்பெக்டர் வீரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வழிப்பறியில் ஈடுபட்ட, கந்தம்பட்டி பகுதியை சேர்ந்த சுரேஷ் (30), மணிகண்டன் (19) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம், செல்போன் மீட்கப்பட்டது.