அரூர் அருகே இளம்பெண்ணின் செல்போனுக்கு ஆபாச படம் அனுப்பிய போலி சாமியார் கைது

Update: 2022-11-26 18:45 GMT

அரூர்:

அரூர் அருகே இளம்பெண்ணின் செல்போனுக்கு ஆபாச படம் அனுப்பிய போலி சாமியாரை போலீசார் கைது செய்தனர்.

சிறப்பு பூஜை

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த விவசாயிக்கு உறவினர் ஒருவர் மூலம் வேலூர் மாவட்டம் எருக்கம்பட்டியை சேர்ந்த சின்னத்துரை (40) என்பவர் சாமியார் என கூறிக்கொண்டு அறிமுகமானார். அப்போது விவசாயி குடும்பத்தினர் தங்கள் வீட்டில் உள்ள பிரச்சினைகள் தீர வேண்டும் என்று சின்னதுரையிடம் குறி கேட்டுள்ளனர்.

விவசாயியின் மனைவி உயிருக்கு ஆபத்து இருப்பதாக சாமியார் கூறியுள்ளார். இந்த ஆபத்தை ஏற்படுத்தும் செய்வினையை எடுக்க வீட்டில் சிறப்பு பூஜை செய்ய வேண்டும் என்று சின்னதுரை கூறியுள்ளார். இதை நம்பி விவசாயியின் குடும்பத்தினர் அவரை வீட்டுக்கு வரவழைத்தனர்.

ஓட்டம்

வீட்டுக்கு வந்த சின்னதுரை பூஜை பொருட்கள் வாங்கி வர வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து விவசாயி மோட்டார் சைக்கிளில் சின்னதுரையை அழைத்துக் கொண்டு பூஜை பொருட்கள் வாங்க கடைவீதிக்கு சென்றார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே இறங்கிய சின்னதுரை அங்கிருந்து ஓடிவிட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயி, சின்னதுரையை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது. திருடனான என்னை போலீசில் பிடித்து கொடுக்க பார்க்கிறாயா? எனக் கூறி உள்ளார்.

ஆபாச படம்

இந்த நிலையில் சிறிது நேரத்தில் விவசாயியின் மூத்த மகளான 26 வயது இளம் பெண்ணின் செல்போன் வாட்ஸ்-அப் எண்ணுக்கு ஒரு ஆபாச படத்தை சின்னதுரை அனுப்பி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயி இதுகுறித்து அரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னதுரையை வலைவீசி தேடினர். இதைத்தொடர்ந்து தப்பி ஓடிய சின்னதுரையை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், சின்னதுரை போலி சாமியார் என்பதும், தன் மீது திருட்டு வழக்கு உள்ளதால், போலீசில் பிடித்து கொடுத்து விடுவார்கள் என்ற அச்சத்தில் மிரட்டுவதற்காக ஆபாச படத்தை அனுப்பி வைத்ததும் தெரியவந்தது. பின்னர் போலீசார் சின்னதுரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்