சேலம் குகையில் அரசு பஸ் கண்ணாடி உடைப்பு; 2 பேர் கைது

சேலம் குகையில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-11-17 21:46 GMT

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே செண்பகமாதேவியில் இருந்து நேற்று இரவு சேலம் பழைய பஸ் நிலையத்திற்கு அரசு டவுன் பஸ் வந்தது. அந்த பஸ்சை டிரைவர் பாபு என்பவர் ஓட்டினார். அப்போது கொண்டலாம்பட்டி தாண்டி டவுன் பஸ் வந்தபோது, அதை தொடர்ந்து பின் பக்கமாக ஒரு ஷேர் ஆட்டோவும் வந்து கொண்டிருந்தது. இதனால் யார் முதலில் செல்வது என்பது தொடர்பாக பஸ்சுக்கும், ஷேர் ஆட்டோவுக்கும் இடையே போட்டி நிலவியதாக கூறப்படுகிறது. இதையடுத்து குகை பாலம் பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்றபோது, தொடர்ந்து வந்த ஷேர் ஆட்டோ திடீரென பஸ்சை முன்பக்கமாக வழிமறித்து நின்றது. பின்னர் ஷேர் ஆட்டோவில் இருந்து இறங்கிய 2 பேர் திடீரென பஸ் டிரைவர் பாபுவிடம் தகராறில் ஈடுபட்டதோடு பஸ்சின் முன்பக்க கண்ணாடியை அடித்து உடைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த செவ்வாய்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். அதில், பஸ் கண்ணாடியை உடைத்ததாக கிச்சிப்பாளையத்தை சேர்ந்த ஜெகதீசன் (வயது 32), பிரபு ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்