பெங்களூருவில் இருந்து மினிவேனில் 410 கிலோ குட்கா கடத்தல்-டிரைவர் கைது

Update: 2022-11-15 18:45 GMT

பாலக்கோடு:

தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பஞ்சப்பள்ளியில் இருந்து மாரண்டஅள்ளி நோக்கி வேகமாக வந்த கர்நாடக பதிவு எண் கொண்ட மினி சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் மினிவேனில் 410 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான குட்கா, பான் மசாலா ஆகியவை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மினிவேனை ஓட்டி வந்த டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.அவர், கிருஷ்ணகிரி மாவட்டம் அளேசீபம் பகுதியை சேர்ந்த இம்ரான் (வயது 24) என்பதும், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சேலத்துக்கு ரூ.3 லட்சத்து 26 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி செல்ல முயன்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் டிரைவர் இம்ரானை கைது செய்தனர். மேலும், 410 கிலோ குட்கா மற்றும் மினி சரக்கு வேனும் பறிமுதல் செய்யப்பட்டது. 

மேலும் செய்திகள்