பரமத்தி அருகே, நிலத்தகராறு வழக்கில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது

பரமத்தி அருகே, நிலத்தகராறு வழக்கில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது

Update: 2022-10-29 18:45 GMT

பரமத்திவேலூர்:

பரமத்தி அருகே, நிலத்தகராறு வழக்கில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள பில்லூரை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 43). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த உறவினரான சந்திரசேகர் (43) என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் முத்துக்குமார் பரமத்தி போலீசில் சந்திரசேகர், அவருடைய மனைவி பருவதம் மீது புகார் கொடுத்தார்.

அதன்பேரில் பரமத்தி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் (55) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த வழக்கில் சந்திரசேகர், மனைவி பருவதம் ஆகியோர் மீது கைது நடவடிக்கை எடுக்காமல் இருக்க போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார், சந்திரசேகரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்து பருவதம் ஈரோட்டை சேர்ந்த தனது சகோதரர் வேலுச்சாமியிடம் தெரிவித்தார். இதையடுத்து வேலுச்சாமி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரிடம் பேசினார்.

ரூ.5 ஆயிரம் லஞ்சம்

அப்போது வேலுச்சாமியிடம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் ரூ.10 ஆயிரம் லஞ்சம் தருமாறு கேட்டார். அதற்கு ேவலுச்சாமி ரூ.5 ஆயிரம் தருவதாக கூறினார். ஆனால் லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத வேலுச்சாமி இதுகுறித்து நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரூபாய் நோட்டுகளில் ரசாயன பவுடரை தடவி வேலுச்சாமியிடம் கொடுத்தனர். இதையடுத்து கீரம்பூர் அருகே ராசாம்பாளையம் சுங்கச்சாவடி அருகே நின்ற சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமாரிடம், வேலுச்சாமி ரூ.5 ஆயிரத்தைகொடுத்தார்.

கைது

அப்போது சுங்கச்சாவடி பகுதியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ‌‌ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் மற்றும் போலீசார் லஞ்சம் வாங்கிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமாரை கைது செய்தனர். அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். லஞ்சம் வாங்கியபோது போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் போலீசார் மத்தியில் பரபரப்பைஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்