ஊராட்சி டேங்க் ஆபரேட்டரை எரித்து கொல்ல முயற்சி-பெட்ரோல் ஊற்றி தீ வைத்த தாய்-மகள் கைது

Update: 2022-10-23 18:45 GMT

பாப்பாரப்பட்டி,:

பாப்பாரப்பட்டி அருகே ஊராட்சி டேங்க் ஆபரேட்டரை தீ வைத்து எரித்து கொல்ல முயன்ற தாய்-மகளை போலீசார் கைது செய்தனர்.

டேங்க் ஆபரேட்டர்

பாப்பாரப்பட்டி அருகே உள்ள சிட்லகாரம்பட்டி கிராமத்தை சேர்ந்த பச்சமுத்து என்பவரது மகன் சிவசங்கர் (வயது 32). இவர் ஊராட்சி மன்றத்தில் டேங்க் ஆபரேட்டராக உள்ளார். இவருக்கு மனைவி மற்றும் மகள் உள்ளனர். சிவசங்கர் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

சிவசங்கர் வீட்டின் அருகே மாசிலாமணி-சஞ்சீவி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் சிவசங்கர் வீட்டின் முன்பு விறகு கொட்டி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் விறகை அகற்ற சொன்னதால் சிவசங்கருக்கும், மாசிலாமணி மனைவி சஞ்சீவிக்கும் (55) இடையே தகராறு ஏற்பட்டது.

கொல்ல முயற்சி

இதையடுத்து இரவு 11 மணி அளவில் சஞ்சீவி வீட்டின் அருகே சிவசங்கர் உடலில் பலத்த தீக்காயங்களுடன் கிடந்தார். வலியால் அலறி துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு 90 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளதால், டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதனிடையே தர்மபுரி மகிளா கோர்ட்டு நீதிபதி முன்னிலையில் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. அப்போது சஞ்சீவி, தனது மகள் லட்சுமி பிரியாவுடன் (32) சேர்ந்து வீட்டின் அருகே தூங்கி கொண்டிருந்த தன்மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக சிவசங்கர் தெரிவித்தார். இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தாய்-மகள் கைது

மேலும் சிவசங்கர் அளித்த வாக்குமூலத்தின் பேரில் சஞ்சீவி, இவருடைய மகள் லட்சுமி பிரியா ஆகியோரை பிடித்து விசாரித்தனர். இதையடுத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து கொல்ல முயன்றதாக சஞ்சீவி, லட்சுமி பிரியா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

ஊராட்சி டேங்க் ஆபரேட்டரை தீ வைத்து எரித்து கொல்ல முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்