நகைக்காக பெண்ணை கொன்ற வாலிபர் கைது

நகைக்காக பெண்ணை கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-16 18:45 GMT

சிவகங்கையை அடுத்துள்ள காராம்போடை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சின்னக்காளை. இவரது மனைவி மீனாள் (வயது 70). சம்பவத்தன்று மீனாள் தனது ஆடுகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்றவர் மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் அவருடைய வீட்டின் அருகே சிதிலமடைந்த வீட்டின் ஒரு பகுதியில் மீனாள் கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும் அவர் அணிந்திருந்த நகைகள் திருடப்பட்டு இருந்தது. மீனாளை கொலை செய்த நபர் நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சிவகங்கை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் மூதாட்டியை கொலை செய்தது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்துள்ள ராஜாகவுண்டபாளையத்தை சேர்ந்த சசிகுமார் (25) என்பது தெரியவந்தது. மேலும், சசிகுமார் உள்பட 13 பேர் கிணறு வெட்டும் வேலைக்காக காராம்போடை கிராமத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தனர். அதில் 11 பேர் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். அவர்கள் கொண்டு வந்த பொருட்களை பார்த்து கொள்வதற்காக சசிகுமாரை மட்டும் இங்கே இருக்குமாறு கூறினர். சம்பவத்தன்று சசிகுமார் அந்த பகுதியில் நடந்து வந்தபோது மீனாள் மட்டும் தனியாக ஆடு மேய்த்து கொண்டு இருந்தார். அவருடைய காதில் தொங்கிய நகையை பார்த்த சசிகுமார் அதை விற்றால் அதிக பணம் கிடைக்கும் என்ற ஆசைபட்டு அவரை கொன்று நகையை திருடியுள்ளார் என தெரியவந்தது. சசிகுமாரை போலீசார் கைது செய்து நகைகளை மீட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்