ஆன்லைன் மூலம் டெய்லரிங் ஆர்டர் கொடுத்து ரூ.10 கோடி மோசடி: 1½ ஆண்டாக தலைமறைவாக இருந்த பெண் கைது

சேலத்தில் ஆன்லைன் மூலம் டெய்லரிங் ஆர்டர் கொடுத்து ரூ.10 கோடி மோசடி செய்த வழக்கில் 1½ ஆண்டாக தலைமறைவாக இருந்த பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-08 21:40 GMT

ரூ.10 கோடி மோசடி

சேலம் மணியனூர் பகுதியை சேர்ந்தவர் திவாகர். இவருடைய மனைவி வைஷ்ணவி (வயது 27). இந்த தம்பதியினர் ஆடை தைக்கும் நிறுவனம் நடத்தி வந்தனர். இதற்காக அவர்கள் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் துணிகளை கொடுத்து, தைத்து வாங்கினர். ஆனால் அதற்கான பணத்தை கொடுக்கவில்லை. இதுதொடர்பாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் திவாகர், வைஷ்ணவியால் ஏமாற்றப்பட்டவர்கள் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இருவரும் துணிகள் தைத்ததற்கான பணத்தை கொடுக்காமல் ஏமாற்றியதும், கட்டிங் மிஷின் வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணத்தை பெற்று மோசடி செய்ததும் தெரியவந்தது. மொத்தம் 400 பேரிடம் ரூ.10 கோடி வரை மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பெண் கைது

இந்த வழக்கில் திவாகரை ஏற்கனவே போலீசார் கைது செய்தனர். தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய வைஷ்ணவி தலைமறைவாக இருந்து வந்தார். அவரை பிடிக்க பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் வைஷ்ணவியை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

இந்தநிலையில் 1½ ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் வைஷ்ணவியை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீசார் அவரை கோவை டான்பிட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவையில் உள்ள பெண்கள் சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்