கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த வடமாநில வாலிபர்கள் 4 பேர் சேலத்தில் கைது

கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த வடமாநில வாலிபர்கள் 4 பேர் சேலத்தில் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-09-15 23:17 GMT

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தை சேர்ந்தவர் பலராம் டகுவா (வயது 30). அதே பகுதியை சேர்ந்தவர்கள் லட்சுமன் பத்ரா (27), சுனில் பத்ரா (22), கிதியா சிகி (22). இவர்கள் 4 பேர் மீதும் ஒடிசா மாநிலம் கட்டாக், கஞ்சம் ஆகிய மாவட்ட போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை, கொலை முயற்சி, துப்பாக்கிகள் பதுக்கி வைத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் இவர்கள் 4 பேரும் தலைமறைவானார்கள். இதையடுத்து அவர்களை் கஞ்சம் மற்றும் கட்டாக் மாவட்ட போலீசார் தேடி வந்தனர். அவர்கள் 4 பேரும் சேலத்தில் பதுங்கி ஒரு விசைத்தறி கூடத்தில் வேலை பார்த்து வருவதாக அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து ஒடிசா மாநில தனிப்படை போலீசார், சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல்ஹோடாவை சந்தித்து தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஒடிசா மாநில தனிப்படை போலீசார் மற்றும் கொண்டலாம்பட்டி போலீஸ் உதவி கமிஷனர் ஆனந்தி, இன்ஸ்பெக்டர் ஜெகநாதன், நுண்ணறிவு பிரிவு உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமகிருஷ்ணன், சிவஞானம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணன், திருமுருகன், ராஜ்குமார், சுப்பராயன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் கொண்டலாம்பட்டி பகுதியில் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

அப்போது 4 பேரும் கொண்டலாம்பட்டி அருகே புத்தூர் பகுதியில் உள்ள ஒரு விசைத்தறியில் வேலை பார்த்து வருவது தெரிந்தது. இதையடுத்து நேற்று மாலை தனிப்படை போலீசார் சம்பந்தப்பட்ட விசைத்தறிக்குள் அதிரடியாக புகுந்து அங்கிருந்த பலராம் டகுவா, லட்சுமன் பத்ரா, சுனித்பத்ரா, கிதியா சிகி ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்