சேலத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

சேலத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-09-12 22:59 GMT

சேலம் அண்ணா பூங்கா அருகே கடந்த மாதம் 16-ந் தேதி ராஜா என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த சக்திபிரபு (வயது 32), குமாரசாமிப்பட்டி பகுதியை ஸ்ரீரங்கன் (43) ஆகியோர் அவரை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி ராஜாவிடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 500-யை பறித்துவிட்டு தப்பி சென்றனர்.

இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திபிரபு, ஸ்ரீரங்கன் ஆகியோரை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் அவர்கள் மீது ஏற்கனவே கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் அஸ்தம்பட்டி, கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையங்களில் பதிவாகி இருந்தது தெரியவந்தது. மேலும் ஸ்ரீரங்கன் கடந்த 2004, 2014, 2018 மற்றும் கடந்த ஆண்டில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் அவர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி, இன்ஸ்பெக்டர் பால்ராஜ் ஆகியோர் போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர். இதை பரிசீலித்து சக்திபிரபு, ஸ்ரீரங்கன் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா உத்தரவிட்டார். இதற்கான ஆணை சேலம் மத்திய சிறையில் உள்ள அவர்களிடம் அதிகாரிகள் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்