உடலை தண்டவாளத்தில் வீசிய 3 வாலிபர்கள் கைது

உடலை தண்டவாளத்தில் வீசிய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-09-10 16:56 GMT


ராமநாதபுரம் அருகே உள்ள கூரியூர் பகுதியை சேர்ந்தவர் உஸ்மான் என்பவரின் மகன் செய்யதுகான் (வயது 20).இவர் ராமநாதபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு படித்து வந்ததோடு ராமநாதபுரம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் இரவு நேரத்தில் பகுதிநேரமாக வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில் செய்யதுகான் ராமநாதபுரம் ெரயில்வே தண்டவாளப்பகுதியில் தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். ராமநாதபுரம் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் அடிப் படையில் சிலரை பிடித்து விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் ராமநாதபுரம் மல்லிகை நகர் பகுதியை சேர்ந்த அசோக் என்பவரின் மகன் வெங்கடேஷ் (வயது 25), கூரியூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் மணிபாரதி (24), பெரியார் நகரை சேர்ந்த பசுமலை மகன் அலெக்ஸ் பாண்டியன் (23) ஆகிய 3 பேரும் செய்யதுகானை தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.

3 வாலிபர்களும் செய்யதுகான் வேலை பார்க்கும் பெட்ரோல் பங்க் அருகில் வந்து மது அருந்தி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது செய்யதுகான் ஏன் குடித்துவிட்டு வந்து இங்கு தகராறு செய்கிறீர்கள் என்று கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் இரும்பு குழாயை எடுத்து சரமாரியாக அவரை தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த செய்யதுகான் இறந்தவுடன் கொலையை மறைப்பதற்காக 3 பேரும் அவரின் உடலை தூக்கிச் சென்று தண்டவாளத்தில் வீசிவிட்டுசென்று விட்டனர். கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் இவர்கள் தான் தாக்கினர் என்பது தெரிய வந்ததை தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்