பெண் வார்டு உறுப்பினர் சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது

பெண் வார்டு உறுப்பினர் சாவு தொடர்பாக தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய கணவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-08-10 22:22 GMT

பெத்தநாயக்கன்பாளையம்:

தற்கொலை

பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா ஆரியபாளையம் மேற்கு காடு பகுதியை சேர்ந்தவர் ரம்யா (வயது 26). பெண் வார்டு உறுப்பினரான இவருக்கும், வெற்றிவேல் என்பவருக்கும் கடந்த 57 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணத்துக்கு பிறகு கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் ரம்யா, வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து ஏத்தாப்பூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

வேறு பெண்ணுடன் தொடர்பு

இதற்கிடையே ரம்யாவின் உறவினர்கள் போலீசில், ரம்யாவின் தலையில் காயம் உள்ளதாகவும், வெற்றிவேலுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால் ரம்யா சாவில் சந்தேகம் உள்ளது என்று கூறியுள்ளனர். இதுதொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

நேற்று ரம்யா உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

கணவர் கைது

இந்தநிலையில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் ரம்யா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய கணவர் வெற்றிவேல் கைது செய்யப்பட்டார்.

திருமணம் ஆகி 57 நாட்கள் ஆவதால், உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்