செல்போனில் ஆபாச படம் பார்த்ததாக கூறி கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளரை மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது

செல்போனில் ஆபாச படம் பார்த்ததாக கூறி கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளரை மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது

Update: 2022-07-23 18:04 GMT

செல்போனில் ஆபாச படம் பார்த்ததாக கூறி கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளரை மிரட்டி ரூ.24 ஆயிரம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதுபற்றிய விவரம் வருமாறு:-

ஆபாச படங்கள்

கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த ஒருவர் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். இவரது செல்போன் அழைப்புக்கு கடந்த 2-ந் தேதி ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தன்னை சைபர் கிரைம் போலீஸ் என கூறி அறிமுகப்படுத்தி கொண்டார்.

உங்களின் செல்போனில் நீங்கள் ஆபாச படங்கள் பார்த்துள்ளீர்கள். உங்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். உங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.24 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என கூறியுள்ளார்.

மிரட்டல்

இதனால் பயந்து போன கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் எதிர்முனையில் பேசிய நபர் கூறியபடி அவர் சொன்ன செல்போன் எண்ணுக்கு 'கூகுள் பே' மூலம் ரூ.24 ஆயிரம் அனுப்பி வைத்தார். இந்த நிலையில் சில நாட்களுக்கு பிறகு மீண்டும் அந்த நபர் தொடர்பு கொண்டு பேசி பணம் கேட்டு மிரட்டினார்.

இதனால் சந்தேகம் அடைந்த கம்ப்யூட்டப் சென்டர் உரிமையாளர் இதுகுறித்து கிருஷ்ணகிரியில் உள்ள சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி விசாரணை நடத்தினார்.

கைது

விசாரணையில் மிரட்டி பணம் பறித்தது கோவை கஞ்சம்பட்டி கே.சி. காலனியை சேர்ந்த நடராஜன் மகன் மகாலிங்கம் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அவர் இதை போல வேறு யாரையும் ஏமாற்றி உள்ளாரா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்