ஏ.டி.எம். மையங்களில் உதவுவது போல் நடித்து ரூ.1¼ லட்சத்தை அபகரித்த இளம்பெண் கைது
மதுரையில் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க உதவுவது போல் நடித்து ரூ.1¼ லட்சத்தை அபகரித்த இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
மதுரையில் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க உதவுவது போல் நடித்து ரூ.1¼ லட்சத்தை அபகரித்த இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
இளம்பெண் கைவரிசை
மதுரை கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்தவர் கோபால் (வயது 70). இவர் அந்த பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணத்தை டெபாசிட் செய்ய சென்றார். அவருக்கு பணத்தை டெபாசிட் செய்ய தெரியவில்லை. அப்போது அங்கிருந்த இளம்பெண், கோபாலுக்கு உதவி செய்வதாக கூறியுள்ளார். அதை நம்பிய அவர், தான்கொண்டு வந்திருந்த 15 ஆயிரம் ரூபாயை அந்த பெண்ணிடம் கொடுத்து குறிப்பிட்ட வங்கி எண்ணிற்கு அனுப்புமாறு கூறியுள்ளார்.
சிறிது நேரத்தில் அந்த பெண் கோபாலிடம் பணத்தை டெபாசிட் செய்துவிட்டதாக கூறிவிட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் வீட்டுக்கு சென்ற கோபாலுக்கு பணம் டெபாசிட் செய்தது தொடர்பாக செல்போனில் எவ்வித குறுஞ்செய்தியும் வரவில்லை. அதில் சந்தேகமடைந்த கோபால் உடனே அவரது வங்கிக்கு சென்று விசாரித்த போது பணம் டெபாசிட் செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது. மேலும் அந்த பெண் தன்னை ஏமாற்றி ரூ.15 ஆயிரத்தை திருடி சென்றதை அறிந்தார். உடனே இதுகுறித்து தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார்.
அடுத்தடுத்து மோசடி
இதே போல் தல்லாகுளம் கண்மாய் மேலத்தெருவைச் சேர்ந்த சுந்தர் (41) என்பவர் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்கச் சென்றபோது அவரிடம் இளம்பெண் ஒருவர் நைசாக பேசி 19 ஆயிரத்து 500 ரூபாயை திருடினார். மேலும் கரும்பாலை சோனையர் கோவில் தெருவைச் சேர்ந்த நாகலட்சுமி என்பவரிடம் 10 ஆயிரத்து 500 ரூபாயும், கருப்பாயூரணியை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமைஆசிரியை ஜெனட்மேரி (63) என்பவரிடம் 69 ஆயிரம் ரூபாயும், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி போஸ் என்பவரிடம் 16 ஆயிரத்து 300 ரூபாய் என மொத்தம் 5 பேரிடம் ஏ.டி.எம். மையத்தில் உதவுவது போல் நடித்து அவர்களது பணத்தை நூதன முறையில் இளம்பெண் திருடியதாக தல்லாகுளம், அண்ணாநகர் போலீசுக்கு புகார்கள் வந்தன.
கண்காணிப்பு கேமரா மூலம் சிக்கினார்
இதையடுத்து ஏ.டி.எம். மையத்துக்கு வருகிறவர்களை ஏமாற்றி பணத்தை திருடும் இளம்பெண்ணை கைது செய்ய துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், உதவி கமிஷனர்கள் சுரேஷ்குமார் (தல்லாகுளம்), சூரக்குமார் (அண்ணா நகர்) தலைமையில் போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்கள் சம்பந்தப்பட்ட ஏ.டி.எம். மையங்களில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் ஒரே இளம்பெண்தான், 5 சம்பவங்களிலும் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில், மதுரை அண்ணாநகர் பகுதியில் அந்த இளம்பெண் சிக்கினார்.
தேனியை சேர்ந்தவர்
விசாரணையில் அவர், தேனி மாவட்டம் கொண்டமாணிக்கம்பட்டி மன்னர் நாயக்கர் தெருவைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் மனைவி மணிமேகலை (24) என்பது தெரியவந்தது. முதியவர்கள் மற்றும் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க தெரியாதவர்களை ஏமாற்றி மொத்தம் 1 லட்சத்து 30 ஆயிரத்து 500 ரூபாயை திருடியதை ஒப்புக்கொண்டார்.
பின்னர் மணிமேகலையை போலீசார் கைது செய்தனர். ஏமாற்றி அபகரித்த பணம் மூலம் தங்கச்சங்கிலி மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி உள்ளார். மணிமேகலையிடம் இருந்து 65 ஆயிரம் ரூபாயை போலீசார் மீட்டனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.